
புதுடெல்லி: ஏப்ரல் 30-
சமூக வலைதளமான ‘ரெடிட்’ பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்கிளப்பியுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும் எங்களது நிறுவனத்துக்கு, மை தயாரிப்பதற்கான 3 ஆலைகள் உள்ளன.
இந்த நிலையில், சமீப காலமாகவே இந்தியச் சந்தையில் சீனாவில் இருந்து மிகக் குறைந்த விலையில் மை இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அவர்களது விலையோடு ஒப்பிடுகையில் எங்களால் போட்டியிட முடிவதில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக எங்களது நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. வேறு வழியின்றி 2 ஆலைகளை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த கடினமான முடிவின் காரணமாக 1,934 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 896 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 2,800-க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். மேலும், 72 பேர் கொண்ட நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுவும் வெறும் 8 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்தும் எனக்கு வருத்தம் உள்ளது. ஊழியர்களுக்கு 3 முதல் 5 மாத கால ஊதியத்தை இழப்பீடாக வழங்க நான் பரிந்துரை செய்தேன். ஆனால் நிர்வாகம் மிகக் குறைந்த தொகையையே (2 வார ஊதியம் + பணிக்காலத்திற்கு ஏற்ப கூடுதல் தொகை) மட்டுமே அங்கீகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த அந்த அதிகாரி, அந்நிறுவனத்திலிருந்து விலகி ஜெர்மனிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


















