
புதுடெல்லி: ஆகஸ்ட் 28-
நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நேபாளத்துக்கு சென்ற 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இவர்களில், திரிசூலி ஒன் பவர் திட்டத்தில் பணிபுரியும் 73 இந்தியர்களும் அடங்குவர்.
இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் உள்ள நமது தூதரகம் திட்டத் தலைவருடன் தொடர்பில் உள்ளது. காணாமல் போன இந்தியர்களைக் கண்டறிவதற்கும்,
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்கும், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேபாள அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய முகமைகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது’’என்றார்.
நேபாளத்தில் மாயமான இந்தியர்கள் எந்தெந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் வழங்கிய பட்டியல்: திரிசூலி-1 மின் திட்டத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்கள். சாம்ராட் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 37 பேர் ஃப்ளைஎவரெஸ்ட் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் யாத்திரை மேற்கொண்ட 49 தமிழக நாட்டினர்.
சாம்ராட் டிராவல்ஸ் உதவியுடன் பயணம் செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 32 பேர் கேரளத்தைச் சேர்ந்த 33 பேர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 64 பேர்.
சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு அவசியம்
நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ‘‘சீனா, நேபாளம், இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சூழலியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இருக்கிறது. அரசியல் போட்டிகள் இருக்கலாம். ஆனால் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பிராந்தியம் இமயமலைப் பகுதி என்பதால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்















