4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்

மும்பை, ஜூலை 18- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெட்டிங்லி யில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் 2-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் பும்ரா விளையாடினார். அதில் இந்தியா தோல்வியடைந்தது.இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா களமிறக்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இர்பான் பதான் மேலும் கூறியதாவது:
ஜஸ்பிரீத் பும்ரா மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. அவரை இந்தத் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தற்போது 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அனைத்து அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் என விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச்சுமையை சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? அவருக்கு வேறு ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். 3-வது போட்டிக்கும், 4-வது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது அவர் குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.