
பிர்மிங்காம், ஜூலை 25- இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க, சாம்பியன்ஸ் அணி கேப்டன் டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருக்கின்றார். டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழித்தும் தன்னுடைய பழைய அதிரடி பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தியது ரசிகர்களை மிரள வைத்திருக்கின்றது. பிர்மிங்காமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியும், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் தொடக்க வீரர் மஸ்டார்ட் 39 ரன்களும், மோயின் அலி 10 ரன்களிலும் சமிட் பட்டேல் 20 ரன்களிலும் மார்கன் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழ்ப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க சாம்பியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஹசிம் அம்லா, நிதானமாக விளையாட, மறுமுனையில் ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சுக்குநூறாக மைதானத்தில் நான்கு பக்கமும் அடித்து நொறுக்கினார். இதன் காரணமாக ஸ்கோர் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் 41 பந்துகளில் எல்லாம் சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 பவுண்டரிகளும், ஏழு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதில் டிவில்லியர்ஸ் ஸ்டிரைக் ரேட் 227 என்ற அளவில் இருந்தது. இதன் காரணமாக தென்னாபிரிக்க சாம்பியன்ஸ் அணி 12 புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் 153 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு தேவையான 151 ரன்களில் டிவில்லியர்ஸ் மட்டுமே 116 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் ஹசிம் அம்லா 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.