டெல்லி, ஜூலை 10- இந்தியாவில் எப்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையச் சேவை தொடங்கும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையம் ஸ்டார்லிங் மூலம் இணையச் சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான அனுமதியாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் ஸ்டார்லிங் தனது இணையச் சேவையைத் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் பிரதானமானது தான் ஸ்டார்லிங். சாட்டிலைட்களை வைத்து அதன் மூலம் இணையச் சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். பல நாடுகளில் இந்த சாட்டிலைட் இணையச் சேவை வெற்றிகரமாக இருந்து வருகிறது. குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு இது மிகப் பெரியளவில் உதவுகிறது. இதற்கிடையே இந்தியாவின் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்தைப் பயன்படுத்தி இணையச் சேவை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு அல்லது ஜென்1 செயற்கைக்கோள் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் வரை செல்லுபடியாகும். இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கும் அதிவேகச் செயற்கைக்கோள் இணையத்தைக் கொண்டு வருவதில் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும். அதேநேரம் இது முதற்கட்ட அனுமதி தான் ஸ்டார்லிங்க் சேவைகளின் வெளியீடு, அரசு துறைகளிடமிருந்து பெறவேண்டிய அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகள், ஒப்புதல்களை முடித்த பிறகே அதன் தனது சேவையைத் தொடங்கும். ஸ்டார்லிங்க் ஜென்1 சாட்டிலைட் என்பது 540 முதல் 570 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் 4,408 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு உலகளாவிய செயற்கைக்கோள் கூட்டமாகும். இந்தச் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சுமார் 600 Gbps வேகத்தில் இணையச் சேவையை வழங்க முடியும். இதன் மூலம் இணைய வசதிக் குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு பக்காவாக இணையச் சேவை கிடைக்கும்.















