பெங்களூர்,டிசம்பர் 23-
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், 3 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த டிச. 20 ஆம் தேதி பெங்களூரு இன்ஸ்டிடுயூட் அப் என்ஜினியர்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3வது நாளான நேற்று (டிச. 22) பள்ளி மாணவர்களுக்கான, தமிழர் மரபு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியைகளுக்கு தமிழோடு விளையாடு எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
வாஸன் கண் மருத்துவமனை இயக்குநர் ஏ.சுந்தரமுருகேசன்.ஆர்பிஏஎன்எம்எஸ் முதல் நிலைக் கல்லூரி தமிழ் ஆசிரியை சிவப்ரியா, வேல்ஸ் பன்னாட்டு பள்ளியின் தமிழ் ஆசிரியை ஆதித்யா புகழேந்தி, சேவாஸ்ரமம் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.
ஆசிரியைகளுக்கு தமிழோடு விளையாடு’ என்ற தலைப்பில் விளாடி வினா, கதை கூறுதல், தாலாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஹொரமாவு வேல்ஸ் பன்னாட்டு பள்ளி, அல்சூர் ஆர்பிஏஎன்எம்எஸ், கோவிந்தம்மாள் பள்ளி, மர்பி டவுன் மாநகராட்சிப் பள்ளி, காக்ஸ் டவுன் அரசு உயர்நிலைப்பள்ளி, ஜாலஹள்ளி குளூனி ஆங்கிலப் பள்ளி சார்பாக 10 ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
அணிக்கு இருவர் வீதம் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு, பழமொழி, அறிஞர்களின் கூற்று, புத்தகங்கள், ஆசிரியர்கள், கண்டுபிடியுங்கள், தமிழ்நாடு, திருக்குறள் ஆகிய தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. உரிய பதில் அளிக்கும் அணிக்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதன்படி நடைபெற்ற 5 சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கி பேசிய வாஸன் கண் மருத்துவமனையின் இயக்குநர் சுந்தரமுருகேசன் பேசியது: பெங்களூருக்கு நான் வந்து இறங்கி கால் வைத்த நாளில், கன்னட பிரபல நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அப்போது, என் நிலைமை எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். அந்த சூழலுக்கு பிறகு எங்கள் மருத்துவமனை வெற்றிகரமாக செயல்பட்டு, மக்களுக்கு பணியாற்றினோம். அதன் விளைவாக கர்நாடகாவில் தற்போது மொத்தம் வாஸனின் 13 கண் மருத்துவமனை கிளைகள் உள்ளன.
மருத்துவமனைக்கு தகுதியான மருத்துவர், தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள் தேர்ந்தெடுப்யது மிகவும் சவாலான பணியாக உள்ளது. அரசு மருத்துவ கல்லுாரியில் படித்து முடித்து வேலைக்கு வரும் மாணவர்கள், புதிய தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் தடுமாறுகின்றனர். அவர்களை பணிக்கு எடுத்த பின்னர், மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்தால் மட்டும் போதாது. தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்தவர்களாக வர வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு சினிமா நடிகர்களை பிடிக்கும். அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காக செய்வதால், உங்களுக்கு அவர்களை பிடிக்கிறது. அதுபோல நீங்களும் உங்கள் வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்றார்.
பின்னர் ரவி கோவலன் தலைமையிலான நம்ம ஊரு தமிழ் மக்கள் குழுவினரின் நடன, கோலாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பாவலர் கல்யாண்குமாரின் சத்திய வெளிச்சம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்ரீராமபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியின் முதல்வர் மசூதனபாபு கலந்து கொண்டு பேசியது: காந்தியைப் பற்றிய இந்த புத்தகம் எளிமையான நடையில் எழுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இதனை வாங்கி படிக்க வேண்டும்.
அண்மை காலமாக காந்தியின் கொள்கைகள் சிந்தாந்த ரீதியாக மறுக்கப்படுகின்றன. மறைக்கப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.நன்னன், சத்தியா எம்ஜிஆர் அறக்கட்டளையின் நிறுவனர் ராஜகோபால் பாலாஜி, புலவர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.