
தருமபுரி: ஜூலை 1 –
கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று காலையில் 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நம் மாநிலத்துக்கு காவிரி ஆற்றில் நீர் கிடைக்கும். கடந்த சில வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி கேரளா, கர்நாடகாவின் குடகு, மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணை முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கனஅடி நீர் வந்தது. இதனால் அந்த தண்ணீர் மட்டுமின்றி அணையில் இருக்கும் தண்ணீரை சேர்த்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 49 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகமானது. ஒகேனக்கல்லுக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.