
திண்டுக்கல்: ஜூலை 2-ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது பொய்யானது எனவும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பலவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் எனவும், பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,” திமுகவிற்கு 10 சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லை என நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். வாக்கு வங்கி இல்லை என்று எப்படி தெரியும்? எப்படி கணக்கு போட்டார்? கணக்கு எதுவும் எடுக்கப்பட்டதா? சர்வே எடுக்கப்பட்டதா? அல்லது மக்களின் மனநிலையை அறிந்து கூறுகிறாரா? எப்படி சொல்கிறார் என தெரியவில்லை. கூட்டல் கணக்கு அவருக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்.
திமுகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என சொல்லி வருகின்றனர். மதிக்காமல் நான் எப்படி அமைச்சராக இருக்க முடியும்., மூன்று முறை இருக்கிறேன். ஒரே தொகுதியில் போட்டி போட அனுமதியை அளித்துள்ளனர். அப்போது எந்த அளவு மதித்து உள்ளனர். உயர்ந்த மரியாதை வைத்திருந்ததால் தான் வாய்ப்பு கொடுத்தார்கள். என் மகனுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள். வேடசந்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் குப்பையில் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஜெயலலிதா புகைப்படம் எங்கேயும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் தான் உள்ளது. ஜெயலலிதாவை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார். நானும் அவரின் புகைப்படத்தை தேடி பார்க்கிறேன். அவரது சிலையை எடுத்துவிட்டு எடப்பாடி சிலையை வைத்தாலும் வைப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி படம் தான் பெரியதாக இருக்கிறது. முரட்டு உருவம். எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறினார். தற்பொழுது பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டார்.