
சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வீட்டில் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையில் மூச்சு திணறி உயிரிழந்தார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (57). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இவருக்கு, மாலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் சுமன்ராஜ் (15), 8 வகுப்பு படிக்கும் கோகுல்ராஜ் (13) என்ற இரு மகன்களும் உள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்திவிட்டு, தனது இரு மகன்களுடன் தூங்க சென்றார். அவரது மனைவியும், மகளும் வேறொரு அறையில் உறங்கினர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்வராஜ், இரண்டு மகன்களும் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மனைவி மாலா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.அப்போது, அறையினுள், ஜெனரேட்டர் புகை சூழ்ந்து இருந்தது. கரும்புகைக்கு மத்தியில் செல்வராஜும், இரு மகன்களும் வாயில் நுரை தள்ளியப்படி சடலமாக கிடந்தனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலாவும், அவரது மகளும், மூவரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த புழல் போலீஸார், மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.