
புதுடெல்லி: ஜூலை 10-
ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு அருகே இன்று காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜாஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், இன்று காலை கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டது, இதனால் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஹரியானாவில், குருகிராம், ரோஹ்தக், தாத்ரி, ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாஜ்ஜரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட் மற்றும் ஷாம்லி வரை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அந்தச் சமயத்தில் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆலோசனை வழங்கியுள்ளது.