திண்டுக்கல்: ஜூலை 12-
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், 31 நாட்களுக்கு பின் உரிய ஆய்வுக்குப் பின் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.


















