
புதுடெல்லி: ஜூலை 12 –
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. மொத்த 15 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 – 800 அடி உயரமே பறந்த நிலையில், 30 வினாடிகளில் கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.
இதில் ஒரேயொரு பயணியை தவிர, 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது.
இதன் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12) அதிகாலை வெளியானது. அந்த அறிக்கையில், சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
- விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்துள்ளது.
- ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார்.
- சில வினாடிக்கு பிறகு, எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கினாலும், ஒரு இன்ஜின் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது.
- கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம்.
- விமானப் பாதைக்கு அருகில் பறவைகள் நடமாட்டம் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.
- இதனால், புறப்பட்ட பிறகு விமானத்தில் ஏற்பட்ட இரட்டை இயந்திர செயலிழப்புக்கான பறவை மோதி நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.
- விபத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வெப்ப சேதம் காரணமாக இது இருக்கலாம்
- விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடரும். முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.