
சென்னை : ஜூலை 15 –
தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு கடல்சார் வாரியம் இயங்கி வருகிறது. இவற்றின் கட்டுப்பாட்டில், பல்வேறு மாவட்டங்களில், 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் சில சரியான செயல்பாடு இன்றி உள்ளன.இந்த துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். அதன் வாயிலாக, தமிழக கடல்சார் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருகும்.
அ.தி.மு.க., ஆட்சியில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்த முடியாமல் போனது. இந்த துறைமுகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக துறை அமைச்சர் எ.வ.வேலு, செயலர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, 40 ஆண்டுகளுக்கு பின், கடலுார் துறைமுகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, செங்கல்பட்டு – முகையூர், பனையூர், விழுப்புரம் – மரக்காணம், கடலுார் – சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் – விழுந்தமாவடி, துாத்துக்குடி – மணப்பாடு, மயிலாடுதுறை – வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில், சிறு துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.