மோகா: ஜூலை 17-
பஞ்சாப் மாநிலத்தில் ரூ.6க்கு லாட்டரி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி மோகத்தில் பலரும் பணத்தை இழந்து நிற்கும் நிலையில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற அதிர்ஷ்டம் கிடைக்கிறது.மோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஸ்மயில் சிங் என்பவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் பெரோஷ்பூருக்கு சென்ற போது, ரூ.6க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். மறுநாள் லாட்டரி டிக்கெட்டை விற்றவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், நீங்கள் ஒரூ.1 கோடியை வென்றுள்ளீர்கள் என்று கூறியதை கேட்டு, ஜாஸ்மயில் சிங் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, இசை வாத்தியங்களுடன் அவரது குடும்பத்தினருடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்தார்.
இது குறித்து ஜாஸ்மயில் சிங் கூறுகையில், ‘இந்தப் பணத்தை வைத்து ரு.25 லட்சம் கடனை அடைப்பேன். எஞ்சிய தொகையை என்னுடைய குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக பயன்படுத்துவேன்’ என்றார்.














