
சென்னை: ஜூலை 18 –
ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி’ என, கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது, தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்தாலும், தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. சென்னை மாகாணமாக இருந்தபோது, 1952ல் நடந்த, முதல் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதும், கூட்டணி ஆட்சி அமையவில்லை.
பின், 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைத்து வென்ற தி.மு.க.,வும், 1977, 1980, 1984, 1991, 2001, 2011 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து வென்ற அ.தி.மு.க.,வும், தனித்தே ஆட்சி அமைத்தன.
டந்த 2006ல் தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பா.ம.க., தயவுடன் ஆட்சி அமைத்தது. ஆனாலும், அக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை. அக்கட்சிகளும் ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, தனிப்பெரும்பான்மை பெற்றது. தமிழக தேர்தல் வரலாறு இப்படி இருக்க, இப்போது முதல் முறையாக, சட்டசபை தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே, ‘கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி தர துவங்கியுள்ளன.
‘வரும் 2026 சட்டபை தேர்தலில் வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்ப திரும்ப கூறி வருகிறார். ஆனால், ‘அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்; கூட்டணியில் நான் எடுப்பதுதான் முடிவு’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விடாப்பிடியாக பேசி வருகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படும், பா.ம.க., தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்ற கோஷத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியிலும், ‘ஆட்சியில் பங்கு’ கோஷம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய, அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ் குமார், ‘காங்கிரஸ் கட்சி எந்த பக்கம் போகிறதோ, அந்த கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எனவே, காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தாக வேண்டும்’ என, கூட்டணி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.