சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் செய்த செயல்

லண்டன், ஜூலை 19- இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் உடனான தனது ஒப்பந்தத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இந்தச் செய்தியை யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப் வெள்ளிக்கிழமை (ஜூலை 18 அன்று) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா ஏ அணியின் முன்னாள் கேப்டனான ருதுராஜ், ஜூலை 22 ஆம் தேதி சர்ரே அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் இங்கிலாந்துக்கு பயணம் செய்யமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது இந்தத் திடீர் விலகலுக்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. ருதுராஜின் விலகல் குறித்து யார்க்ஷயர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போது வரவில்லை. இந்த சீசனில் அவர் எங்கள் அணியில் இடம்பெறமாட்டார் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.” “அவரது விலகலுக்கான காரணத்தை நான் கூற இயலாது, ஆனால் எல்லாம் சுமுகமாக இருக்கும் என நம்புகிறோம். இந்தச் செய்தியை நாங்கள் சற்று முன்புதான் அறிந்தோம். அவருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், போட்டிக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களே இருப்பதால், மாற்று வீரரைத் தேர்வு செய்வது கடினம்” என்று தெரிவித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், யார்க்ஷயர் அணிக்காக ஐந்து முதல்-தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.