
சபீனா பார்க், ஜூலை 23- வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் களம் கண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட
தொடரின் இரண்டாவது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் முன்பே அறிவித்து இருந்தார்.
தனது கடைசி சர்வதேச போட்டியான இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, ரஸ்ஸல் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடினார். முன்னதாக இந்த டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இருந்த ஆஸ்திரேலியா, டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் தடுமாறியது. 13.5 ஓவர்களில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த நிலையில், 7வது வீரராக களம் இறங்கினார் ரஸ்ஸல். இந்தப் போட்டிதான் தனது சொந்த ஊரில் விளையாடும் கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்ததால் அவர் வந்த போது ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இருந்தனர். தனது அதிரடி பாணியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த ரஸ்ஸல்,
வெறும் 15 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவினார். பென் ட்வார்ஷுய்ஸ் வீசிய 14வது ஓவரில் அவர் அடித்த மூன்று சிக்ஸர்கள், ஒன்று நேராகவும், மற்றொன்று விக்கெட் கீப்பருக்கு மேலாகவும், மூன்றாவது மிட்-விக்கெட் திசையிலும் பறந்தன. இது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டமிழந்து வெளியேறியபோது, 16.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 139க்கு 6 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைப் பாராட்டினர், மேலும் சபீனா பார்க் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங்கில் ஜொலித்த போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.