பாட்னா, ஜூலை 26- ‘பீஹாரில், அரசு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், 70,000 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழை, மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை’ என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது இதனால், அந்த திட்டங்களுக்கான நிதியில் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், 2023 – 24ம் நிதியாண்டிற்கான மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முடிக்கப்பட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு திட்டங்களுக்கான, செலவின பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2023 – 24ம் நிதியாண்டில், பீஹாரின் மொத்த பட்ஜெட் 3.26 லட்சம் கோடி ரூபாய். இதில், 79.92 சதவீதமாக 2.60 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள, 65,512.05 கோடியில், 23,875.55 கோடி ரூபாயை மட்டும் திருப்பி செலுத்தியுள்ளது. அந்த நிதியாண்டில், மாநிலத்தின் செலவுகள் முந்தைய ஆண்டைவிட 12.34 சதவீதம் அதிகரித்துள்ளன.சான்றிதழ் மாநிலத்தின் மொத்த நிலுவையில் உள்ள கடன்களில் உள்நாட்டு கடன் 59.26 சதவீதம். நிகர கடன்கள் முந்தைய ஆண்டைவிட, 28,107.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன.















