
புவனேஸ்வர்: ஜூலை.26-
ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து ஒடிசா லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று ராமா சந்திர நேபக்குக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஜெய்பூர் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஒன்றரை கிலோ தங்க நகைகள், 4 தங்க பிஸ்கெட்டுகள், 16 தங்க நாணயங்கள், 5 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
ராமா சந்திர நேபக் கூறும்போது, “எனது மனைவி, மகன் வணிகத்தின் மூலமாக கிடைத்த வருவாயில் சொத்துகளை வாங்கி உள்ளோம். எனது மகனின் திருமணத்தின்போது பலரும் தங்க நகைகளை அன்பளிப்பாக வழங்கினர். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை’’ என்று தெரிவித்தார்.