டோக்கியோ: ஜூலை 30 –
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ளது. இந்நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்து வருகின்றனர். இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து உயரமான கட்டங்கள், மலை மேல் ஏறி குவிந்து வருகின்றனர்.
ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. வீடுகள் குலுங்கியது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ரஷ்யா – ஜப்பான் மட்டுமின்றி பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்கியது.
ஜப்பானின் ஹோக்கைடோவில் முதல் முதலாக சுனாமி தாக்கியது. இங்கு 30 சென்டிமீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தது.
இதனால் பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் வீடு, ஹோட்டல்களை விட்டு கார்களில் வெளியேறினர். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இஷினோமாகி என்ற இடத்தில் 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கியது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் அருகே உள்ள ஹியோரியா மலை மீது குவிந்து வருகின்றனர்.



















