லண்டன், ஜூலை 31- இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தனர். ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு திட்டங்களை யும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்த போட்டியில் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை இந்திய அணி பறிகொடுத்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போதிலும் கே.எல்.ராகுல், ஷூப்மன் கில் ஜோடி அபாரமாக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தது. அவர்களது போராட்ட குணத்தை பின்பற்றி ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடிக்க பெரிதும் உதவினர். போட்டி டிராவில் முடிவடைந்த போதிலும் இந்திய அணியின் செயல் திறன் வெற்றிக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகளுமே கடைசி நாளில் கடைசி செஷன் வரை பரபரப்பாக இருந்தது.



















