
புதுடெல்லி: ஆக. 5-
டில்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசிய நிலையில், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது.
இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு – காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
இதன்பின், ஜம்மு – காஷ்மீரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் காலக்கெடுவை குறிப்பிடவில்லை.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜம்மு – காஷ்மீருக்கு முடிந்தவரை விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 2024ல் ஜம்மு – காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
வலியுறுத்தல் இதில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அபார வெற்றி பெற்றது. அவரது மகன் ஒமர் அப்துல்லா, முதல்வராக பதவியேற்றார்.
அவரும், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். சந்திப்புக்கான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சில மணி நேரங்கள் கழித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனாதிபதி முர்முவை சந்தித்தார். ஒரே நாளில் ஜனாதிபதி முர்முவை இருவரும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், ஜம்மு – காஷ்மீர் பா.ஜ., தலைவர் சத் சர்மா, லடாக் துணை நிலை கவர்னர் கவிந்தர் குப்தா ஆகியோர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.
மேலும், அனைத்து ஜம்மு – காஷ்மீர் ஷியா சங்க தலைவர் இம்ரான் ராசா அன்சாரியும், அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளுக்கு பின், டில்லியில் ஜனாதிபதி முர்முவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசியதால், ஜம்மு – காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தேர்தல் ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை வலுப்படுத்தும் வகையில், டில்லியில் இன்று, தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டமும் நடக்கிறது. இதில், அது தொடர்பாக விவாதிக்கப்படக் கூடும் என, தெரிகிறது.