
டெல்லி, ஆகஸ்ட் 6- எதிர்வரும் 2027ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதன் மூலம் குடிமக்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? (NRC) என்று கேள்வி எழுந்திருந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொண்டிருந்த தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில், குடிமக்களுக்கான அடையாளம் எது? என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய அரசு பதிலளித்துள்ளது. இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை குறித்த விவரங்கள் என்ன? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், “குடியுரிமை சட்டம், 1955 கடந்த 2004ம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த சட்டம், ஒவ்வொரு குடிமகனையும் கட்டாயமாகப் பதிவு செய்து, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) விவரங்கள் இடம்பெற்றுள்ள குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படலாம்” என பதிலளித்திருந்தது. அதேநேரம், 2027ம் ஆண்டு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடிமக்கள் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுமா? என்கிற கேள்விக்கும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. குடிமக்கள் கணக்கெடுப்பு என்பது, இந்தியா முழுவதும் உள்ள மக்களில், எவ்வளவு பேர் இந்தியர்கள், எவ்வளவுபேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதை பற்றிய கணக்கெடுப்பாகும். இதன் மூலம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அடையாளம் காண முடியும். இந்த கணக்கெடுப்பு முதன் முறையாக அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3.29 கோடி பேர் அசாம் மாநிலத்தில் வசிப்பவர்களாகவும், அதில் 19 லட்சம் பேர் இந்தியர்கள் என்பதற்கு போதுமான சான்று இல்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.