
புதுடெல்லி: ஆக. 6-
மத்திய பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தி பரபரப்பான கருத்துகளை முன் வைப்பார். அப்படி அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய கருத்து நீதிமன்றம் வரை சென்றது. ராணுவம் குறித்து ராகுல் காந்தி விமர்சித்ததாக தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்மையான இந்தியராக இருந்தால் ராகுல் காந்தி இப்படி பேசியிருக்க மாட்டார் என நீதிமன்றம் கூறியது. இதற்கு பதிலளித்துள்ள பிரியங்கா காந்தி, உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பல கருத்துகளை பேசினார். இந்தியா – சீனா எல்லை மோதல் பற்றியும் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
அப்போது அவர் இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசினார் என்று உதய சங்கர் ஶ்ரீவஸ்தவா உத்தரப்பிரதேச மாநிலத்தின், லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. லக்னோ நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவு மற்றும் வழக்கு ஆகியவற்றை ரத்து செய்ய கோரி ராகுல் காந்தி அலகாபாத் நீதிமன்றத்தில் முறையிட்டார். ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்த அலகாபாத் நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ராகுல் காந்திக்கு, பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனமும் தெரிவித்திருந்தனர். உண்மையான இந்தியராக இருந்தால் “இந்தியாவின் 2,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள தகவல் உங்களுக்கு எப்படி தெரியும். மனுதாரர் அங்கு இருந்தாரா. இதுதொடர்பாக உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. உரிய ஆதாரம் இல்லாமல் எதற்காக இப்படிப்பட்ட கருத்துகளை பகிர வேண்டும். நீங்கள் உண்மையாக இந்தியராக இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்.
மேலும் நீங்கள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளீர்கள். இதை ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை. எதற்காக சமூகவலைதளத்தில் பகிர வேண்டும்.” என்று கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள். நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “யார் உண்மையான இந்தியர் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் பணியும் கிடையாது. ராகுல் காந்தி ஒருபோதும் ராணுவத்துக்கு எதிராக பேச மாட்டார். அவர் ராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அவரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக அரசை கேட்பது என் சகோதரரின் அடிப்படை கடமை. இதை மத்திய அரசு விரும்பவில்லை. இதுகுறித்து நேரடியாக பேசவும் மத்திய அரசு தயாராக இல்லை. அதனால் தான் திரை மறைவில் இதுபோன்ற தந்திரமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றதை கூட சரியாக நடத்த முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.” என்றார்.