மகளுக்கு ஒரு நீதி? மருமகளுக்கு ஒரு நீதியா?

சென்னை: ஆக.12-
பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் தனது குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார் நிறுவனரான ராமதாஸ். அதே நேரத்தில் தனது குடும்பத்தில் இருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என சொன்ன அவர், மனைவி மகளை அரசியல் மேடையில் ஏற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி தெரியுமா? என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாமக தொண்டர்கள் புலம்புவதை கேட்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் கூட்டணி என்று வரும்போது அதிமுக, திமுக அலுவலகத்தை தேடி தான் செல்வார்கள். ஆனால் அதிமுகவாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் தேடிச்சென்று கூட்டணி அமைக்கும் ஒரே கட்சி பாமக தான். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க கட்சியான, பாமக தற்போது தந்தை மகன் இடையேயான மோதலால் பிளவுண்டு கிடக்கிறது. பாமக மோதல் கட்சியின் எதிர்காலம் எனக் கூறி அரசியலுக்கு மகனை கொண்டு வந்த ராமதாஸ், தற்போது அவரே மகனை தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். மேலும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக புதிய நிர்வாகிகளை நியமித்ததோடு அன்புமணிக்கு போட்டியாக பொதுக்குழுவை நடத்துவதாகவும் அறிவித்திருக்கிறார். வரும் 17ஆம் தேதி ராமதாஸ் தரப்பு பொதுக்குழு நடைமுறை இருப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ் இந்த நிலையில் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தினார் ராமதாஸ். வழக்கம்போல் இல்லாமல் இந்த மாநாட்டில் அன்புமணியின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படங்கள் மாநாட்டு முகப்பிலும் பேனர்கள் அலங்கார வளைவுகளிலும் இடம் பெற்று இருந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றை ராமதாஸின் மூத்த மகள் காந்தி மேடையில் வாசித்தார். செளமியா அன்புமணி மருமகள் அரசியலுக்கு வரக் கூடாது என சொல்லிவிட்டு, தற்போது தனது குடும்பம் என்று வந்தவுடன் மனைவி மகளை முன்னிறுத்துவதும், மகளுக்கு வன்னியர் சங்கத்தில் பொறுப்பு தருவதும் எவ்வாறு நியாயமாகும், மருமகள் என்றால் ஒரு நியாயம் மகள் என்றால் ஒரு நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர்.