பெங்களூரில் பள்ளி பஸ் தீப்பிடித்து ஒருவர் உயிருடன் கருகி பலி

பெங்களூரு: ஆக. 13-
பழுதடைந்த காரணத்தால் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து அதில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடு கருகி பலியான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பனஸ்வாடி, ஓஎம்பிஆர் லேஅவுட்டில் நேற்று இரவு நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்தது, உள்ளே இருந்த ஒருவர் உயிருடன் எரிந்தார். இரவு 10:08 மணிக்கு பஸ் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பேருந்தின் உள்ளே ஒருவர் உயிருடன் எரிந்ததாக பனஸ்வாடி தீயணைப்புத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேருந்தின் அடியில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் சுமார் 30 வயதுடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அருணுக்கு சொந்தமான தனியார் பள்ளிப் பேருந்து. சம்பவத்தில் இறந்தவர் முற்றிலும் எரிந்துவிட்டார், அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நபர் ஒரு பாய் மற்றும் தலையணையை கொண்டு வந்து தனியார் பேருந்தில் தூங்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிப் பேருந்து சுமார் மூன்று மாதங்களாக பழுதடைந்திருந்தது. 14 வருட பழமையான பேருந்தின் எப்சி மற்றும் காப்பீடு காலாவதியாகிவிட்டது. எனவே, உரிமையாளர் அருண், லேஅவுட் சாலையில் பேருந்தை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை அவரும் பேருந்திற்கு வந்து சென்று சென்று இருக்கிறார்.
பேருந்தின் கதவு சரியாக பூட்டப்படவில்லை. எனவே, அந்த நபர் பேருந்தின் உள்ளே சென்று புகைப்பிடித்து விட்டு தூங்கியதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற ராமமூர்த்தி நகர் போலீசார், பீடி துண்டு புகைத்ததால் பேருந்து தீப்பிடித்ததா அல்லது வேறு யாராவது பேருந்தை தீ வைத்து கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.