திருச்செந்தூரில் முருகன் கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

தூத்துக்குடி: ஆகஸ்ட் 23-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.. இதனால் திருச்செந்தூரே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.. பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை இழுத்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்று ஆவணி திருவிழாவாகும்.
ஆவணி தேரோட்டம் இந்த வருடத்துக்கான ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.. இதையடுத்து, தொடர்ந்து 12 நாட்கள் நடந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும், 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அரோகரா முழக்கம் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் இன்று நடைபெறுவதால், இதில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே திருச்செந்துரில் பக்தர்கள் குவியத் துவங்கிவிட்டார்கள்.. இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்குமேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.. இந்த தேரோட்டத்தில் முதல் நிகழ்வாக, சிறிய விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.. இதைத்தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் குமரவிடங்க பெருமான் தேர் புறப்பட்டது.. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.. அப்போது அரோகரா முழக்கம் விண்ணை பிளந்தது.. சிறப்பு ஏற்பாடுகள் காலை 7 மணிக்கு பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்..
இந்த ஆவணி தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் முன்கூட்டியே போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் – விழா நிறைவு அதேபோல நாளை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள்.