என்ஐஏ விசாரிக்க அசோக் வலியுறுத்தல்

கொப்பால் : ஆக. 26-
‘’தர்மஸ்தலாவின் நற்பெயரை கெடுக்க, மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சித்து உள்ளது. எனவே, வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,’’ என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக எழுந்த புகார் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பொய் புகார் அளித்த சின்னையா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மஸ்தலாவுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று சில மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சித்து உள்ளது.
சின்னையாவுக்கு முகமூடி அணிவித்து, ஆதரவு அளித்தது முதல்வர் சித்தராமையாவின் காங்., அரசு தான்.
நேத்ராவதி ஆற்றங்கரையில் பள்ளங்கள் தோண்டுவதற்கு, 2 முதல் 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதற்கு யாருடைய பணம் செலவிடப்பட்டது? யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு, சிறப்பு விசாரணை குழு அமைத்து உள்ளீர்கள்.
இதுவே முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்றால், அங்கு சென்று கல்ல றையை தோண்டுவீர்களா ?
அவர்களின் இலக்கு ஹிந்து கோவில்கள் மட்டுமே. புகார் அளித்தவர் குறித்து ஆரம்பத்திலேயே விசாரித்து, விசாரணைக்கு ஒப்படைத்திருக்கலாம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா விவ காரம் தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் விளக்கம் அளித்து விட்டேன். உண்மை வெளிவர, சிறப்பு விசாரணை குழுவை அமைத்தோம். இதற்கிடையில் பலரும் அறிக்கை வெளியிடுகின்றனர். இத்தகைய அறிக்கைகளால் உண்மை வெளிவராது. இவ்விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். விசாரணை குழுவினருக்கு நாங்கள் வழிகாட்ட முடியாது. தர்மஸ்தலா வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை அமைப்பிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.