அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

புதுக்கோட்டை: ஆகஸ்ட் 26-புதுக்கோட்டை அருகே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரியராஜபாலு, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து, கையில் பெற்று சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில், தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தி வருகின்றன.கடந்த 22ல் துவங்கிய போட்டிகள், 28 வரை நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜபாலுவும், அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது அண்ணாமலை பதக்கத்தை, சூரியராஜபாலு கழுத்தில் அணிவிக்க முயன்றார். அப்போது, அண்ணாமலை கையை தடுத்தார் சூரியராஜபாலு. ’கையில் வேண்டுமானால் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன். என் கழுத்தில் பதக்கத்தை நீங்கள் அணிவிக்க வேண்டாம்’ என்று சொன்ன சூரியராஜபாலு, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை அப்செட் ஆனார். ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தார். சூரியராஜபாலுவை நிர்ப்பந்தப்படுத்தாமல், பதக்கத்தை கையில் கொடுத்து விட்டு, பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி கையால் பட்டம் வாங்க, நாகர்கோவில் தி.மு.க., நிர்வாகியின் மனைவி மறுத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், அடுத்த சம்பவமாக ஆவாரங்குடிபட்டி சம்பவம் அரங்கேறி உள்ளது.