பெங்களூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

பெங்களூர்: ஆக. 30-
ஐபிஎல் 18 வது சீசனின் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் வெற்றி விழா பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி நடந்தது.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் வரை பலியாகினர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்லில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் வெற்றியை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
பைனல் முடிந்த மறுநாளான ஜூன் 4ம் தேதி ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்தனர். கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விதானசவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர்.
ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களின் ஒரு பகுதியாக இருந்தனர்.
நம் அணியை தனித்துவமாக்குவதில் நம் நகரம், நம் ரசிகர்கள் ஒரு பகுதியாக உள்ளனர். அவர்கள் இல்லாதது எங்களின் ஒவ்வொரு நினைவுகளிலும் எதிரொலிக்கும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எந்த ஆதரவு கொடுத்தாலும் அதனை வைத்து அவர்களின் இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. இருப்பினும் முதல் படியாக ஆழ்ந்த மரியாதையுடன் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆர்சிபி சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்குகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.