
திருவண்ணாமலை: செப். 3- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்தச் சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்துள்ளது. தெருநாய்களால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, தெருநாய்களின் தொல்லைக்கான தீர்வு குறித்து விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், தெருநாய்களால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (30). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் அனாமிகா (4) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள ஒருவரிடம் குழந்தையை மந்திரிப்பதற்காக கார்த்தி மனைவியுடன் பைக்கில் அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அவர்கள் தச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு பைக் மீது பாய்ந்தன. இதனால் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கார்த்தி, தமிழ்ச்செல்வி, அனாமிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனாமிகா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கார்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி சிகிச்சை பெற்று வருகின்றனர்.