துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு

புது டெல்லி, செப்டம்பர் 9-
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். சுதர்சன் ரெட்டியை விட சிபி ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோகமாக வெற்றி பெற்றார்.
இன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜனதா தளம் ஐக்கிய (ஜேடியு), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), அசாம் கண பரிஷத் (ஏஜிபி), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி), ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தது. மறுபுறம், ரெட்டிக்கு காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சமாஜ்வாதி கட்சி (எஸ்பி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா (யுபிடி), தேசியவாத லெஃப்ட் கட்சிகள் (யுபிடி) உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பிஜு ஜனதா தளம் (பிஜேடி), பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) உள்ளிட்ட பல கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ராதாகிருஷ்ணன் 437 வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 452 வாக்குகள் பெற்றார்,
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தின் அறை எண் 10 இல் உள்ள வாக்குச் சாவடியில் தனது முதல் வாக்கைப் பதிவு செய்தார். அவருடன், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், ஜிதேந்திர சிங் மற்றும் எல் முருகன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சென்றனர். ஜூலை 21 அன்று ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததால் இன்று தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.