சென்னை: செப். 18-
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வரும் சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாகை மற்றும் திருவாரூரில் விஜயின் பிரச்சாரத்திற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. விஜய் இந்த வாரம் இரண்டு மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் முதன்முறையாக விஜய் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். திருச்சி நகருக்குள் உள்ள மரக்கடை பகுதியில் விஜய் பேசிய போது தொழில்நுட்பக் கோளாறால் மைக் வேலை செய்யவில்லை. இதனால் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு விஜய் கிளம்பினார். ஆனால் மணிக்கணக்கில் விஜயின் பேச்சைக் கேட்க அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
விஜய் வரும்போது தொண்டர்கள் எந்தவித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இடையே திருச்சியில் நடந்தது போல எந்தவித அசௌகரியங்களும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடாது எனவும் அதற்கேற்றாற்போல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்திய நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.















