தீ விபத்து 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர்: அக்.6-
ராஜஸ்தான் மாநிலம்,
ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: ஐசியுவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவியது. தீ விபத்து ஏற்பட்ட போது ஐசியுவில் 11 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கோமா நிலையில் இருந்தனர். தீ விபத்துக்கு பிறகு, உடனடியாக அவர்களை டிராலிகளில் மீட்டு, முடிந்தவரை பல நோயாளிகளை ஐசியுவிலிருந்து வெளியே கொண்டு வந்தோம்.
பின்னர் நீண்ட நேரம் போராடி சிகிச்சை அளித்தோம். CPR மூலம் அவர்களை உயிர்ப்பிக்க நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம், ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள் ஆவர். ஐந்து நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு மருத்துவமனை நிர்வாக தெரிவித்துள்ளது.
நியூரோ ஐ.சி.யூ வார்டின் ஒரு அறையில் காகிதங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரத்த மாதிரி குழாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இரவு 11.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.சி.யூவில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், 11 நோயாளிகள் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் 13 பேர் அருகிலுள்ள வார்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.தீயணைப்புப் படையினர் வந்த நேரத்தில், முழு வார்டும் புகையால் நிரம்பியிருந்தது, அதிகாரிகள் தீயை அணைக்கும் நேரத்தில், 8 பேர் இறந்துவிட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கட்டிடத்தின் எதிர் பக்கத்தில் இருந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீர் ஜெட்களை தெளிக்க வேண்டியிருந்தது.” தீயை அணைக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. நோயாளிகள் படுக்கைகளுடன் சாலையோரத்திற்கு மாற்றப்பட்டனர் என்று அவர் கூறினார்.முன்னாள் முதல்வர் அசோக் கெஹ்லோட் இது குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு, “எஸ்எம்எஸ் மருத்துவமனையின் அதிர்ச்சி மையத்தின் ஐசியூவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்தனர். இது மிகவும் வேதனையளிக்கிறது.
இந்த விபத்தில் இனி உயிர் இழப்பு ஏற்படக்கூடாது என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தி அளிக்கட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் இறந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அசோக் கெஹ்லோட் கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மாநில அரசு கடுமையான மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தோன்றினாலும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் குழு சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்று ஜெய்ப்பூர் காவல் ஆணையர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார்.
விசாரணைக்கான வழிமுறைகள்:
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தீ விபத்து நிலைமையை ஆய்வு செய்ய மருத்துவமனைக்குச் சென்று, அதிகாரிகளிடமிருந்து சம்பவம் குறித்து தகவல்களைப் பெற்று, நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் ஐசியுவில் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியப் பேசினார்.
காயமடைந்த நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கவனமாக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட அவர், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு துக்கத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்றும் பிரார்த்தித்தார்.