
பெங்களூரு: அக். 23-
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை பயின்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பள்ளியில் தாஸ் (60) என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக மணி அடிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். எலக்ட்ரிக் மணி அறிமுகமான பிறகும் இந்தப் பள்ளியில், பழைய மணி அடிக்கும் முறையே தொடர்ந்தது. மணி அடிக்கும் ஊழியரான தாஸ் நேரத்தை துல்லியமாகப் பார்த்து, 38 ஆண்டுகளும் நேர்த்தியாக தனது பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது கடைசி பணி நாளின் போது மாலை 4 மணிக்கு கடைசியாக மணி அடித்தார். அப்போது பள்ளியின் அனைத்து மாணவிகளும் ஆசிரியர்களும் அவரை சூழ்ந்தவாறு நின்று உற்சாகமாக கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதனை அமி குட்டி என்ற முன்னாள் மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘‘தாஸ் அங்கிள் கடந்த 38 ஆண்டுகளாக பள்ளியில் மணி அடித்து வந்தார். ஒவ்வொரு நாள் காலையும் அவர் மணி அடிக்கும்போது எங்கள் அனைவரின் வகுப்புகளும் தொடங்கும். மாலையில் மணி அடிக்கும் போது உற்சாகமாக பள்ளியை விட்டு வெளியே வருவோம். தாஸ் அங்கிள் கடைசியாக மணியை அடித்தபோது கண்கள் கலங்கிவிட்டன’’ என குறிப்பிட்டார். இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேர் பார்த்த நிலையில், லட்சக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.

















