
சென்னை: அக். 24-
நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று ஆய்வுப் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்.16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானப்பருவ நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
9.67 லட்சம் டன் கொள்முதல்: இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரில் அரசு கணக்கீடுகளின்படி 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் அறுவடைப் பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்
துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
















