
கள்ளக்குறிச்சி:அக். 25- சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று தார் லோடு ஏற்றிக் கொண்டு சேலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செம்பியன்மாதேவி மேம்பாலத்தில் சென்றபோது, ஓட்டுநர் துரைராஜ் லாரியை இடதுபுறமாக திருப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது, கடலூர் பாதிரிக்குப்பத்திலிருந்து சேலத்துக்கு சென்று கொண்டிருந்த கார், எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த கடலூர் சந்தோஷ், அவரது நண்பர் சூரியகுமார், சந்தோஷின் பெரியம்மா பாக்கியலட்சுமி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.















