
சென்னை: அக்டோபர் 27
“விஜய்யை பார்க்க என் மனைவியை.. சொந்தகாரங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க.. பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல” என கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் தந்தை வேதனையோடு பேட்டி அளித்துள்ளார். தவெக நிர்வாகிகள் தன்னை சென்னைக்கு அழைத்து வராத நிலையில் தனிப்பட்ட முறையில் மாமல்லபுரம் வந்த அவர், அங்கு ரிசார்ட்டில் அவரை அனுமதிக்காததால் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ மூலம் ஆறுதல் கூறிய விஜய், நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்.
இதற்காக பாதிக்கப்பட்டோர் பேருந்துகள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்தார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரான மோகன் என்பவரின் தந்தை கந்தசாமி, தன்னை தவெக நிர்வாகிகள் விஜய்யை சந்திக்க சென்னைக்கு அழைத்து வரவில்லை என வேதனையோடு பேட்டி அளித்துள்ளார். தவெக நிர்வாகிகள் தன்னை சென்னைக்கு அழைத்து வராத நிலையில் தனிப்பட்ட முறையில் மாமல்லபுரம் வந்த அவர், அங்கு ரிசார்ட்டில் அவரை அனுமதிக்காததால் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.
“கரூர் பொதுக்கூட்டத்துக்கு வந்த எனது மகன் மோகன் கூட்ட நெரிசலில் உயிரிழந்து விட்டார். விஜய்யை பார்க்க என் மனைவியை.. சொந்தகாரங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க.. பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல. நான் தனிப்பட்ட முறையில் நானாக இங்கு வந்திருக்கிறேன். நேற்று இரவு முதல் என்னை அனுமதிக்குமாறு கேட்டு வருகிறேன். கட்சியினர் சொன்னால் தான் அனுமதிப்போம் என்கிறார்கள். மாவட்ட செயலாளருக்கு போன் செய்தால், அந்த மாதிரி கூட்டமே இங்கு நடக்கவில்லை என்கிறார்கள்.
என் மனைவிக்கு கண் தெரியாது, என் பையனை நான் தான் பார்த்து வந்தேன். தவெக கொடுத்த பணத்தை கையாள்வதற்காக எனது உறவினர்கள் எனக்குத் தெரியாமல் எனது மனைவியை அழைத்து வந்துள்ளனர். தலைவர் விஜய்யை பார்த்து நேரில் பேச வேண்டும் என நான் இங்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

















