கரூர் சம்பவம் – ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் 8 வழக்குகள்

சென்னை: அக்டோபர் 27
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான 8 வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, இன்று இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரிய மனு, தலைமை நீதிபதி அமர்வில் இன்றைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், விஜய் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, தவெக தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில்
இருந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., – டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, தவெக நிர்வாகி கார்த்தீபன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.