
சென்னை: அக்டோபர் 27
‘மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் அறிக்கை:
‘விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி செய்யும் நெல் மணி ஒன்று கூட வீணாகக்கூடாது’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அதன்படி, கொள்முதல் செய்யும் நெல்லை, பாதுகாப்புடன் சேமிக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியை விட, கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.ஊக்கத்தொகை அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை விட, சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு 70 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாய்,
ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில், 2016 முதல் 2021 வரை, 1.13 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக, 22.7 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.தி.மு.க., அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஆண்டுக்கு சராரியாக, 42.6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.
நடப்பாண்டு செப்டம்பர், 1ம் தேதி முதல் கடந்த, 24ம் தேதி வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, 10.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 8.77 லட்சம் டன் நெல் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள, 1.63 லட்சம் டன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

















