
தூத்துக்குடி: அக். 27-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 6 மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது.
பகல் 12.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து புறப்பாடாகி சண்முகவிலாசம் சேர்கிறார். பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருள்கிறார்.
சஷ்டி பூஜை தகடு: தொடர்ந்து, கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து சுவாமி கிரிபிரகாரம் உலா வந்து கோயில் சேருகிறார். இரவு பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். நாளை (அக்.28) இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளன.
வெளிநாட்டு பக்தர்கள்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்தும் வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் பகுதியை சுற்றி 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூருக்கு 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, சென்னை தாம்பரத்திலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















