
பெங்களூர்: அக்டோபர் 29-
பெங்களூரில் இரவு நேரத்தில் 21 வயது கல்லூரி மாணவி ரேபிடோ’ காரில் பயணம் செய்தார். அப்போது கல்லூரி மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேபிடோ கார் டிரைவர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாடகை கார் டிரைவர் அவரை பாதி வழியில் கீழே தள்ளிவிட்டு சென்றது திடுக்கிட வைத்துள்ளது. நோபளத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் தான் இரவில் அவர் கல்யாண் நகருக்கு சென்று டின்னர் சாப்பிட்டார். அதன்பிறகு அங்கிருந்து சேழதேவனஹள்ளிக்கு புறப்பட்டார். இதற்காக கல்லூரி மாணவி ரேபிடோ காரை முன்பதிவு செய்தார். ரேபிடோ காரும் வந்தது. மாணவி காரில் ஏறி பயணித்து கொண்டிருந்தார். அப்போது தான் டிரைவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கல்லூரி மாணவியை டிரைவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி மாணவியை பார்த்து ஆபாச சைகை காண்பித்துள்ளார். ஆனால் கல்லூரி மாணவி கண்டுக்கொள்ளவில்லை. பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர் அமைதியாக இருந்தார். ஆனால் இந்த அமைதியை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரேபிடோ டிரைவர் இளம்பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டார். இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தொடக்கூடாத இடங்களை தொட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தினார். காப்பாற்றும்படி அவர் உதவி கோரினார். இதனால் பயந்துபோன கார் டிரைவர் மாணவியை பாதி வழியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி சோழதேவனஹள்ளி போலீசில் புகார் செய்தார்.

















