தேவர் சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மரியாதை

மதுரை: அக்.30- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பகிர்ந்த எக்ஸ் பதிவில், “தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…” எனக் குறிப்பிட்டுப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கரூர் சம்பவத்துக்குப் பின் பொதுவெளியில்.. முன்னதாக கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையில் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாறியதால் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. அதுவரை பொதுவெளிக்கு வராத புஸ்ஸி ஆனந்த் அதன்பின் கட்சியினரின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தற்ப்போது, மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். வரும் நவம்பர் 5-ல் தவெக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் பொதுவெளிக்கு வந்துள்ளது கவனம் பெறுகிறது.
அதேபோல், அக்.27 அன்று கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அதுவரை எந்த அரசியல் நகர்வும் இல்லாமல் இருந்த விஜய், அந்தச் சந்திப்புக்கு அடுத்த நாள் (அக்.28) நெல் கொள்முதல் விவகாரம் குறித்து அறிக்கைவிட்டார். அதனையடுத்து நேற்று (அக்.29) தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருன்ராஜ் அரசுப் பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சில மணி நேரங்களிலேயே விஜய் சிறப்புப் பொதுக்குழு பற்றி அறிவித்தார். இன்று (அக்.30) புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.