
வாஷிங்டன், நவ. 28- அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிராக டிரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறார். இதற்கிடையே மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்தி வைக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். குடியேற்ற பாலிசிக்களை மொத்தமாக மாற்றவுள்ளதாகவும் அதற்கு இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றைய தினம் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்தது. அங்குத் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினார். இந்தச் சம்பவத்தில் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் 29 வயது ரஹ்மத்துல்லா லக்வாத் என்று தெரிய வந்தது. உயிரிழப்பு அவர் ஆப்கானை சேர்ந்தவர் என்றும் பைடன் காலத்தில் அவர் அமெரிக்காவில் குடியேறினார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த இரு வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும், அதில் ஒரு வீரர் சிகிச்சை பலனில்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே டிரம்ப் இப்போது திடீரென தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருவோரை முழுமையாக நிறுத்த போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற விண்ணப்பங்களையும் நிரந்தரமாக நிறுத்தி வைக்கிறேன். அமெரிக்காவில் சிஸ்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க இது உதவும். பைடன் ஆட்சி காலத்தில் பல லட்சம் பேர் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டனர். ‘ஸ்லீப்பி ஜோ பைடனின் ஆட்டோபென்’ (Sleepy Joe Biden’s Autopen) திட்டம் மூலம் இவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார். பைடன் ஆட்சி காலத்தில் அவர் எந்தவொரு முடிவுகளையும் எடுக்கவில்லை அவரது கையெழுத்துகளைக் கூட கம்ப்யூட்டரே போடுவதாக டிரம்ப் முன்பே கடுமையாகச் சாடி வந்தார். அதை நக்கலடிக்கும் விதமாகவே இத்திட்டத்திற்கும் அந்த பெயரை வைத்திருக்கிறார். சலுகை கிடைக்காது அமெரிக்காவுக்குத் தேவையில்லாத அல்லது நமது நாட்டை நேசிக்கத் தகுதியற்ற அனைவரையும் வெளியேற்றுவேன். இனிமேல் நமது குடிமக்களுக்கு மட்டுமே பெடரல் அரசின் சலுகைகள் கிடைக்கும். இங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்குப் போகும் அனைத்து ஃபெடரல் சலுகைகளையும் மானியங்களையும் நிறுத்துவேன். உள்நாட்டு அமைதியைச் சீர்குலைக்கும் வெளிநாட்டினரின் குடியுரிமையை ரத்து செய்வேன். அமெரிக்க அரசுக்குச் சுமையாகவோ, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ இருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்துவேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

















