தென்கிழக்கு ஆசிய நாடுகளை கபளீகரம் செய்த புயல்

கொழும்பு, டிச. 2- இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவமாடிய ‘டிட்வா’, ‘சென்யார்’ புயலுக்கு இதுவரை, 1,140க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; நுாற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவின் மிக மோசமான பாதிப்பாக இது மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் நம் அண்டை நாடான இலங்கையை கபளீகரம் செய்து, நம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நோக்கி மையம் கொண்டுள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களால், இந்தோனேஷியாவில் மட்டும் 604 பேர் உயிரிழந்துள்ளனர்; இலங்கையில் 366 பேரும், தாய்லாந்தில் 176 பேரும், மலேஷியாவில் மூன்று பேரும் பலியாகி உள்ளனர்.
இது தவிர நுாற்றுக்கணக்கானோர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், கனமழையால் அங்குள்ள பெரும்பாலான பாலங்கள் இடிந்து விழுந்தன; பிரதான சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இலங்கை
இலங்கையில் இதுவரை, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாது காப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் என, கூறப்படுகிறது. கனமழைக்கு இதுவரை, 366 பேர் பலியாகி உள்ள நிலையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதையடுத்து, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இலங்கை அதிபர் திசநாயகேவிடம் தொலைபேசியில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நம் நாட்டின் சார்பில் நிவாரணப் பொருட்களையும், மீட்புப் படையினரையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.இந்தோனேஷியா இதேபோல் இந்தோனேஷியாவில் சென்யார் புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை, 604 பேர் உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.