
சென்னை: டிசம்பர் 3-
சென்னை சேர்ந்த 14 பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கடந்த நவம்பர் 25 ம் தேதி 6 நாட்கள் சுற்றுலாவாக சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை சென்றனர்.
இலங்கையில் மழை, வெள்ளம், நிலச்சரிவு இருந்ததால், 29 பேரும் தங்கள் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்தனர்.ஆனால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இலங்கையிலேயே ஒரு கிராம பகுதியில் தங்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்ததன் மூலம், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளை செய்தனர்.அவர்கள் பாதுகாப்பாக சென்னை திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 29 பேரும் சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் அவர்கள், இலங்கையில் சிக்கி தவித்த எங்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

















