14 லட்சம் படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் பரிசு

வாஷிங்டன், டிச. 18- அமெரிக்காவில் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ‛செக்’ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக அனைவருக்கும் கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியால் நினைத்ததை விட அதிகப்படியான பணம் குவிகிறது. இதனால் வீரர்களுக்கு பரிசாக இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பாதுகாப்பு துறையின் படை பிரிவுகளில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு அவர் இன்பஅதிர்ச்சி கொடுத்தார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறுகையில், எனது நிர்வாகம் நம் நாட்டில் சேவையாற்றி வரும் சர்வீஸ மெம்பர்களுக்கு (பாதுகாப்பு படை வீரர்கள்) 1,776 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம்)மதிப்பிலான செக்கை வழங்க உள்ளது. இது 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான காசோலை வீரர்களை நோக்கி செல்கிறது. பிற நாடுகள் மீது விதித்த வரியால் நினைத்ததை விட அதிக பணம் சம்பாதிக்கிறோம். இதனால் அது நமக்கு பெரியளவில் உதவுகிறது. அதன் பலனை பெறுவதில் நம்முடைய ராணுவ வீரர்களை விட யாருக்கும் அதிக தகுதி இல்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார். டொனால்ட் டிரம்ப் தனது பேச்சில் சர்வீஸ் மெம்பர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அமெரிக்காவில் ராணுவம், கடற்படை,
விமானப்படை, கடலோர காவல்படை, விண்வெளி படையினர் என்று பல ஆயுதப்படைகள் உள்ளன. இந்த படைகளில் பணியாற்றி வரும் 14 லட்சம் பேருக்கு தான் தலா ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 1,776 டாலர்களை வழங்குவதாக அறிவித்தார்.