
இஸ்லாமாபாத்: டிசம்பர் 19-
‘மேற்கு ஆசிய நாடான பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இஸ்ரேல் தன் படைகளை விலக்கிய பின், சர்வதேச நாடுகளின் படைகள் அங்கு செல்ல வேண்டும். ‘குறிப்பாக பாகிஸ்தான் தன் படைகளை அனுப்பி வைக்க வேண்டும்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் தருவதால், பாக்., முப்படைகளின் தளபதி அசிம் முனீருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.20 அம்ச திட்டம்
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த, 20 அம்ச அமைதி திட்டம் முக்கிய காரணம். இதை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இரு தரப்பிலும் கைதிகள் பரிமாற்றம் நடந்தது. இறந்த பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.இந்த திட்டத்தின் அடுத்தடுத்த அம்சங்களான இஸ்ரேல் படைகளை படிப்படியாக விலக்குவது, ஹமாஸை ஆயுதமற்றதாக்குவது, காசா மறுகட்டமைப்பு, சுரங்கம் மற்றும் ஆயுத வசதிகள் அழிப்பு, நிலைத்தன்மைக்காக சர்வதேச படைகளை குவிப்பது உள்ளிட்டவற்றை தற்போது நிறைவேற்ற உள்ளனர்.
இந்த சர்வதேச படைகளில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகள் தங்கள் படைகள் பங்கேற்க செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்துகிறார். அந்த வகையில் டிரம்புடன் நெருக்கமாக பழகும் பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதி அசிம் முனீரிடம், அவர்கள் நாட்டு படைகளை அனுப்ப அழுத்தம் தந்துள்ளார்.ஆனால், ஹமாஸை ஆயுதமற்றதாக்கும் பணி, மோதல் ஏற்பட்டு இழுபறியாகும் என பல நாடுகள் தயக்கம் காட்டுகின்றன; மேலும், இது அவரவர் நாடுகளில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் கோபத்தை துாண்டும் என்பதால் எச்சரிக்கையுடன் உள்ளனர்.பாகிஸ்தான் தளபதி அசிம் முனீர் விரைவில் அமெரிக்கா செல்கிறார். ஆறு மாதங்களில், அதிபர் டிரம்புடன் இது மூன்றாவது சந்திப்பு.அமெரிக்க முதலீடு, ராணுவ உதவிகளை பெற முனீர் முயல்கிறார். இந்நிலையில், அதிபர் டிரம்பின் கோரிக்கையை மறுத்தால் அது அவரை கோபப்படுத்தலாம் என கூறுகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், ஹமாஸை ஆயுதமற்றதாக்குவது பாகிஸ்தானின் வேலை இல்லை என, ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.‘அரசியலமைப்பு திருத்தங்களால் அவரது அதிகாரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ ரீதியான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவருக்கு உள்ளது’ என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வாரங்களில் அவர், இந்தோனேஷியா, மலேஷியா, சவுதி, துருக்கி, ஜோர்டான், எகிப்து, கத்தார் தலைவர்களை சந்தித்தார். இது, காசா திட்டம் குறித்த ஆலோசனையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இது குறித்து அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஒருவர் கூறியதாவது:காசாவுக்கு படைகளை அனுப்ப முனீர் சம்மதித்தால், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கா- – இஸ்ரேல் எதிர்ப்பு கொண்ட இஸ்லாமிய கட்சிகளின் போராட்டங்கள் மீண்டும் எழலாம்.எதிர்ப்புசமீபத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் – இ – லப்பை பாகிஸ்தான் கட்சி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆகியவை முனீருக்கு எதிராக உள்ளன. இவர்கள், ‘முனீர் இஸ்ரேலுக்கு உதவுகிறார்’ எனக்கூறி போராட்டத்தில் குதிக்க தயாராக உள்ளனர்.இந்த விஷயத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பா அல்லது உள்நாட்டு அரசியலா? எந்த வழியில் பயணிப்பது என முடிவெடுக்க முடியாமல், தளபதி அசிம் முனீர் தவித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


















