
ரியாத்: டிசம்பர் 20-
மேற்காசியாவில் உள்ள பாலைவன பிரதேசமான சவுதி அரேபியா சுட்டெரிக்கும் வெயிலுக்கு பெயர் போனது. எப்போதும் வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில், இயற்கைக்கு மாறாக அங்கு கடும் பனிப்பொழிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 17 முதல் தபுக், ஹெய்ல், ட்ரோஜெனா உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் அதிக பனிப் பொழிவு பதிவாகி வருகிறது. ஜபல் அல்-லவ்ஸ் என்ற மலைப்பகுதி பனிக்குவியல்களால் மூடப்பட்டுள்ளது.
இதே போல, தலைநகர் ரியாத்தின் பெரும்பாலான பகுதிகளும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை மோசமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
சவுதி அரேபியாவின் முக்கிய பகுதிகள் வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனியால் மூடப்பட்டு இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்ற ன.
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பனிப்பொழிவுக்கு, காலநிலை காரணம் அல்ல என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவ து:வட துருவப் பகுதியை சுற்றி உருவான ஒரு மிகக் குளிர்ந்த காற்று அமைப்பு தெற்கு நோக்கி நகர்ந்தது. இது, ‘சைபீரியன் குளிர் அலை’ எனப் படுகிறது. கடந்த 17 முதல் இது வடக்கு சவுதியை தாக்கியது.
வழக்கமாக, குளிர்ந்த காற்றுடன் ஈரப் பதம் நிறைந்த காற்று சேரும்போது மழை பெய்யும். ஆனால் வெப்பநிலை பூஜ்யத்திற்கு குறைவாக இருந்ததால், தற்போது பனிப்பொழிகிறது. இவ்வாறு கூறினர்.


















