
சென்னை: டிசம்பர் 26-
‘வந்தே பாரத்’ உட்பட, அனைத்து விரைவு ரயில்களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை உயரும்’ என, ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வரும் 26ம் தேதி முதல், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்படும் என, கடந்த 21ம் தேதி ரயில்வே அறிவித்தது.
அதன்படி, முதல் 215 கி.மீ.,துாரத்துக்கு மேல் செல்லும் ரயில்களுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புறநகர் மின்சார ரயில்களில், கட்டணம் உயர்வு இல்லை. மாதாந்திர சீசன் டிக்கெட்டிலும், கட்டணம் உயர்த்தப்படவில்லை.
மெயில், விரைவு ரயில்கள், வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, தேஜஸ் உட்பட அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்களிலும், இன்று முதல் கட்டண உயர்வு அமலாகிறது. இவற்றில், 215 கி.மீ.,க்கு அதிகமான துாரம் செல்லும், அனைத்து வகையான ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா, ஸ்லீப்பர் மற்றும் ‘ஏசி’க்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.புதிய கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே, முன்பதிவு செய்துள்ள பயணியருக்கு, புதிய கட்டண உயர்வு பொருத்தாது. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது.

















